Thursday 26 November 2009

மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!

தீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.

இந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.



இந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்கா இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.

உலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.

இப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.



அன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே! ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்குதலை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.

தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.



உலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.

இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

இதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.



இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா!

Saturday 14 November 2009

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்!

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.



முதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.

இவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.

இவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

அத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.



கிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Tuesday 3 November 2009

இருக்கிறம் ஏமாற்றியது!


இருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.

இது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………

இருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன்? இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.

எத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.

மட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.

இது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.

அதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.

இது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்!

புதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.
அதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.

Sunday 1 November 2009

இந்திய - இலங்கை தமிழ் சினிமா!

தமிழ் சினிமா என்கின்ற போது இந்திய சினிமாவிற்கே வரவேற்ப அதிகம்!

காரணம் இந்திய சினிமாவின் தரம். அது மட்டுமா தொன்று தொட்டு வந்த விதம் அவ்வாறு அமைந்து விட்டது.

தமிழர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இந்தியா எவ்வாறாவது எமக்கு அவசியம் ஆகும் அல்லவா! அதுபோன்றே தான் இந்திய சினிமாவும்.



இலங்கையில் தமிழ் சினிமாக்கள் பல எடுக்கப்படுகின்றன. எனினும் அது இந்த நாட்டை விட்டு வெளியில் செல்லாது இங்கேயே இருந்து விடுகின்றன.

சொல்லப்போனால் மண்ணோடு மண்ணாய் போய் விடுகின்றன இலங்கை தமிழ் சினிமா.

அத்துடன், இந்தியா போன்றதொரு பெரிய நாட்டிற்கு அருகில் இருக்கும் போது எம்மால் முன்னோக்கி செல்லது கடினம். அது எனக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கு உதாரணமொன்று கூட சொல்ல முடியும். ஆலை மரம் அருகில் எந்தவொரு செடியையும் வளரவிடாது!



அதுபோன்று தான் இந்திய சினிமா

ஆலை மரம் - இந்தியா
ஏனைய செடிகள் - இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்

இந்தியாவிற்கு அருகில் இருப்பதனால் எம்மால் முன்னோக்கி செல்வதில் கடினமாகவுள்ளது என்கிறார்கள் உள்ளுர் பட தயாரிப்பாளர்கள்.



எனினும், அப்படி சொல்ல முடியாது திறமையான, தரமான, ரசிகர்களின் மனதை கவரும் வண்ணமான திரைப்படங்களை வழங்கினால் நிச்சயம் இந்தியாவை தாண்டி இலங்கை சினிமா செல்ல முடியும்.

என்ன இவன் இலங்கையில் படம் எடுக்க சொல்ரானா? வேணானு சொல்லுரானா? ஒண்ணுமே புரியல அப்படி தானே!

புரிந்து கொண்டால் சரி!

ஏன் இலங்கையிலும் திறமையான நடிகர்கள் இருக்கின்றார். அவர்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நடிக்க வேண்டும். இங்கேயே தமது திறமைகளை காட்டி முன்வர முடியும் தானே.

இந்திய சினிமாவை எடுத்து பார்க்கும் போது அதில் முக்கிய புள்ளிகளாக காணப்படும் கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கையிலும் திறமை உள்ளது என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர்.



பார்ப்போம் சினிமாவின் எதிர்காலம் இலங்கைக்கு எப்படி என!

Thursday 1 October 2009

நான் என்ன கடவுளா!

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி நான், எனது இணைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.

நான் கூறியவாறு கூறிய திகதியில் சம்பவங்கள் நடக்க நான் என்ன கடவுளா?



எனினும் நான் அன்று கூறியது இன்று நடந்துள்ளது. என்னவென்று பார்க்கிறீர்களா? அது தான் சுனாமி.

சுமத்திரா தீவில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுனாமியினால் சுமார் 770ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும், பலர் காணாமல் போயும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கடந்த கிழமை பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. சுமார் 40 வருடங்களின் பின்னர் ஏற்பட்டதாம்! அதில் 150ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ஒரு வருடத்தில் 3 கிரகணங்கள் ஏற்பட்டால் அந்த வருடத்தில் ஒரு பாரிய அழிவொன்று உள்ளது என்பது உறுதி! நான் அன்று எனது இணைத்தளத்தில் இட்ட பதிவை பார்த்து பலர் சிரித்தார்கள். ஏன் நிறுவனத்தில் இன்றும் என்னை கேலி செய்வார்கள்.

எனது இந்த பதிவும் முன்னெச்சரிக்கைக்கான பதிவு தான்! இந்த வருட இறுதிக்குள் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது.

அதனால் தயவு செய்து எதற்கும் அவதானத்துடன் இருக்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இது உலகம் புதுப்பிக்கப்படுவதற்கான காலப்பகுதி. இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு பின்னர் இந்த உலகம் புதுப்பிக்கப்படும் என்பது வரலாறு!

இந்த உலகம் புதுப்பிக்கப்படுவது யுகமொன்றிற்கு ஒரு முறை தான்! அந்த யுகம் புதுப்பிக்கப்படும் ஆண்டு நெருங்கி விட்டதாம். அந்த ஆண்டு தான் 2012!



2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் உலகின் பிரசித்திப் பெற்ற கலண்டரான மாயன் கலண்டரின் திகதிகள் முடிவடைகின்றன.

அதன் பின்னர் உலகம் எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி!

எனது பழைய பதிவை பார்க்க இந்த முகவரியில் பயணிக்கவும்!

http://aprasadh.blogspot.com/2009/07/2012-22.html

Thursday 24 September 2009

ஆதவன் + வேட்டைக்காரன்

தமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன.



சினிமா வாழ்க்கையின் பிரவேசத்திலிருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை மனதில் இடம் பிடித்து தற்போது அவர்களினாலேயே விமர்சிக்க வைத்துள்ள நடிகர் விஜயின் வேட்டைக்காரன்.

இளைஞர்கள் ரசிக்கின்ற, இளம் பெண்கள் காதலிக்கின்ற தற்போதைய சினிமா ரசிகர்களின் நாயகன் சூர்யாவின் ஆதவன்.

தொடர் வெற்றிகளை தந்து முன்னணியிலுள்ள சூர்யா மற்றும் தற்போது சற்று சினிமாவில் வீழ்ந்துள்ள விஜய் ஆகியோரின் இரு படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் விசேடம் என்னவென்றால் உண்மையான இரு நண்பர்களின் போட்டிக்காலம் இது!

எனது இன்றைய பதிவு சிறிய ஆய்வு தான்! இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்! சும்மா.

அரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க எண்ணியுள்ள விஜயை அவருடைய பல ரசிகர்கள் கைவிட்டுள்ளனர். சிலர் அவரை தனது மனதிலிருந்தே நீக்கிவிட்டனர்.



விஜயின் வெற்றி படங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது தான் விஜய் அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருந்தமை.

ஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்!

அதனால் வெளிவரவுள்ள வேட்டைக்காரன் எவ்வளவு சிறந்த படமாக இருக்கின்ற போதிலும், அது வெற்றி பெறுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

விஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.

ஆனால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.



இவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!

அதனால் வெளிவரவுள்ள ஆதவன் அனைவரது உள்ளங்களிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக சினி ரசிகர்களின் தெரிவிக்கின்றனர்.

இதனால் இம்முறை வெளிவரும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பது அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி!

இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்! நிச்சயம் காலம் பதில் கூறும்!

Tuesday 22 September 2009

அனைவருக்கும் நன்றி!


குறுகிய காலத்தில் பெருமளவானோரை இந்த பதிவுகளின் ஊடாகவே சந்தித்துள்ளேன். பலரது முகவரியை நான் அறிந்தேன்.

அதுமட்டுமன்றி என்னை பலரும் அறிந்தது இந்த பதிவுகளின் மூலம் என்றும் கூறலாம்.

இவ்வாறு பதிவுலகில் பிரவேசித்த எனக்கு இதுவரை இருவர் விருதுகளை வழங்கியுள்ளனர்.

இன்றைய பதிவு அவர்களை மையமாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், எனது பதிவுலக பிரவேசத்திற்கு உட்சாகம் கொடுத்தவர்களுக்குமே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

முதல் முறையாக அவர்களுக்கு எனக்கு கிடைத்த விருதை வழங்க விரும்புகிறேன்.

முதலாவது விருது இதுவரை பதிவுலகத்திற்கு பிரவேசிக்காது எனக்கு பலவகையில் ஒத்துழைப்புக்களை வழங்கிய என் அண்ணன் டிரோஷனுக்கு.

இரண்டாவது எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தகவல்களை பெற்றுக் கொடுத்த லோஷன் அண்ணாவிற்கு.

http://loshan-loshan.blogspot.com/

மூன்றாவது பதிவுலகில் சிறந்த பதிவுகளை இட்டு வரும் ஹிஷாம் அண்ணாவிற்கு.

http://nhisham.blogspot.com/

நான்காவது எனது அருகில் இருந்தாலும், அருகில் இல்லாவிடினும் தகவல்களை தொடர்ந்தும் வழங்கிய வெற்றியின் சதீஷன்.

http://sshathiesh.blogspot.com/

ஐந்தாவதாக விருது வழங்கியவருக்கே மீண்டும் அதே விருதை வழங்க விரும்புகிறேன்! (சிந்து)
http://vsinthuka.blogspot.com/


இறுதியாக இதுவரை எனக்கு பலவகையில் உதவிகளை வழங்கிய என் நண்பர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்!


எனது பதிவுகளின் இடுகை தொடரும்.............

Sunday 13 September 2009

மனிதனைத் தாக்கும் மற்றுமொரு மிருகம்!



மனிதர்களை கடந்த சில மாதங்களாக தாக்கிய பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து இன்னுமொரு மிருகத்தின் காய்ச்சல் மனிதனை அண்மித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பத்திரிகை செய்தியை கண்டு வியப்படைந்தே இந்த பதிவை சில நாட்களின் பின்னர் இன்று இடுகிறேன்!

தென் கிழக்காசிய நாடுகளிலேயே இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படுவதாக இன்றைய பத்திரிகையில் படித்தேன்!

மேலும், இந்த குரங்குக் காய்ச்சல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இதுவரை அண்மிக்கவில்லை என்பது திருப்தியளிக்கிறது.

நீண்ட வால், குட்டை வால் குரங்குகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ் மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சில மனிதர்களிடம் தொற்றியுள்ளதாக பீதி ஏற்பட்டுள்ளது.

இது நுளம்புகளினால் ஏற்படும் மலேரியா காய்ச்சல் வகையைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகளிடமிருந்து பரவிய இந்த வைரஸ், மனிதனை தாக்கியுள்ளது. இதுவரை மலேசியாவில் மாத்திரம் 150ற்கும் மேற்பட்டோர் குரங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் 3இல் 2 பங்கினரை குரங்குக் காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் இருவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன், தற்போது இந்தோனேஷியாவிலும் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானால் உடலின் இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி மனிதன் குரங்கிலிருந்து வந்ததை தற்போது மறந்துள்ள நிலையில் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

ஆனால் பன்றிக் காய்ச்சல். மனிதன் பன்றியிலிருந்து வரவில்லை?

Tuesday 1 September 2009

பதிவர்களுக்கான பதிவு!



பதிவுகள் இப்போது வியாபாரமாகி விட்டன. நாங்கள் பதிவுகளை இடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் பதிவுகளை இடுகின்றனர்.

அதிலும் சில பதிவர்கள் தமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை வருகைகள் என பார்த்துக் கொள்வதற்காகவே பதிவுகளை இடுகின்றனர்.

ஓகே அதுவும் சரி தான்! அதை நான் பிழை என சொல்ல மாட்டேன். காரணம் எமது தளத்தில் இட்ட பதிவை எத்தனை பேர் பார்த்து அதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என தெரிந்து கொண்டால் தான், அந்த பதிவில் நாங்கள் வெளிப்படுத்தி கருத்துக்களின் பெறுமதியை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

அப்போது தான் எமது அறிவும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.

அடுத்த விடயம் தான், பதிவுகளுக்கு வாக்களித்தல்! நீங்கள் எமக்கு வாக்களியுங்கள், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் என நண்பர்களிடம் கூறி தமக்கு தானே, தமது பதிவை வலுமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இது சரியா? நிச்சயம் இது பிழை என தான் என்னால் கூற முடிகிறது.



வேண்டாம், உண்மையான பதிவின் பெறுமதியை நாங்கள் அறிந்து கொண்டு எமது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

மற்றுமொரு விடயமும் உள்ளது. நான் முன்னதாக கூறியதை போல ஏன் நாங்கள் பதிவை இடுகிறோம் என தெரியாது, எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என மனதில் நினைத்து பதிவுகளை இடுதல்.

அவ்வாறு இடும் பதிவுகளில் அர்த்தமொன்றும் இல்லை. (சும்மா)

நாங்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு காலத்தில் எமக்கே தேவைப்படலாம். அதனை நினைவில் வைத்து பதிவுகளை தளங்களில் இடவும்.

இதுபோல நான் கடந்த ஆண்டு எமது புலோக்கில் இட்ட பதிவு எனக்கு தேவைப்பட்டது.



சந்திராயன் 01 விண்கலத்தை பற்றி தகவல்களை செய்திகளில் சேர்த்துக் கொள்ள எனக்கு அந்த பதிவு தேவைப்பட்டது.

அதுபோல பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படலாம்.

அதனால் தயவு செய்து நீங்கள் வெளியிடும் பதிவு பலருக்கும் உபயோகப்படும் பதிவாக அமைய வேண்டும்.

இது உங்கள் சொத்து எப்போதிருந்தாலும் உங்களுக்கே தான்.
அதில் ஏன் தேவையற்ற, கற்பனை விடயங்கள்! (கவிதைக்கு அழகு கற்பனையும், பொய்யும்) பதிவு கவிதையாயின் இது சரி!

கற்பனையாக இருந்தாலும் அது மற்றவருக்கு தேவைப்படுமாயின். அதுபோதும் எமக்கு.

பதிவுகளில் போட்டி வேண்டும். பொறாமை வேண்டாம்!

Saturday 29 August 2009

சந்திராயனை காணவில்லையாம்!


இந்தியாவினால் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன்-1 விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விண்வெளியை நோக்கி இஸ்ரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் - 1 விண்கலத்தின் தொலைக்காட்சி அளவிலான ஆராய்ச்சி கருவி 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சந்திரனை சென்றடைந்துள்ளது.

அதன்மூலம் சந்திரனின் பாகங்கள் குறித்து விபரங்களை திரட்டிக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையின் இந்தியாவையும் இணைத்த செயற்பாடுகளில் சந்திராயன் 1 முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அத்துடன், தற்போது இந்தியா சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை நிர்மாணித்து வருவதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவினால் சந்திரனை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட விண்கலத்திலிருந்து பல்வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

சந்திரனின் படங்கள், தற்போதைய சந்திரனின் உருவம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் 01 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக பார்வையிட:-
http://aprasadh.blogspot.com/2008/10/blog-post.html

Thursday 27 August 2009

தேவையா (விஜய்) இது!


நான் சிறிய வயதிலிருந்தே விஜயின் ரசிகன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விஜயை யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன்.

அப்படி இருந்த என்னை இன்று இப்படியொரு பதிவை போட வைத்து விட்டார் விஜய்! ஏன்?

தனக்கென ஒரு பாதை வைத்துக் கொண்டால் ஒருவன் நிச்சயம் உயர்வான இடத்தில் போவது உறுதி! அப்படியான பலரை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜனி, கமல், விக்ரம் தற்போது அந்த பாதையில் சூர்யா ஆகியோர்.

விஜயும் இதே பாதையில் தான் இவ்வளவு காலமும் இருந்தார். அதற்கு உதாரணமாக பலவற்றை கூற முடியும். ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

அது தான் அவரின் ஸ்டைல், அந்த ஸ்டைலை வைத்துக் கொண்டு இன்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படியான ஒரு இடம் கிடைத்திருக்கும் விஜய்க்கு ஏன் இப்படி ஒரு ஆசை!
அரசியலில் போக போவதாக கடந்த காலங்களில வெளியான செய்திகளை அவர் தற்போது உறுதியான உறுதிப்படுத்தி விட்டார்.

கடந்த ஞாயிற்றுகிழமை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இலங்கை பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சந்திப்பு நீண்ட நேரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்கள் இருவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் இந்த நிலைக்கு காரணம் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான்!
ஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வார். அப்போது அவரை அவருடைய அப்பா இல்லை யாராலும் காப்பாற்ற முடியாது!

ஒரு நல்ல வழியை ஆண்டவன் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் போது ஏன் தேவையில்லாதவற்றிற்கு ஆசை. வேண்டாம் தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்!

இவ்வாறு அவர் அரசியலுக்குச் செல்லும் பட்சத்தில் அவருடைய வாழ்க்கை கேள்வியாகிவிடும். இப்போ உள்ள வழி தான் சரி விஜய்க்கு!


அனைத்தும் ஆண்டவனின் கைகளில். அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றால் சந்தேஷம் தான் எனக்கு!

Tuesday 25 August 2009

இது என்ன தெரியுமா!

















மனிதனின் கைகள் எப்படி! சத்தியமா என்னுடைய கைகள் இல்லை!

Monday 24 August 2009

உச்சக்கட்டம்!


எந்தவொரு முக்கியமான நிகழ்விற்கும் முழுமையாக சமூகமளிக்க முடியாது போவது எனக்கு இயற்கை! இத்தனை வருடமும் இப்படி நடந்து வந்த எனக்கு மீண்டும் அதே நடந்து விட்டது.

நேற்று நடைபெற்ற வலைப்பதிவாளர்களின் சந்திப்பை பற்றி தான் சொல்லுறேன்!

ஞாயிற்றுகிழமை எனக்கு அதிகாலை முதல் பகல் 12 மணி வரையிலான வேலை நேரம். அதனால் எனக்கு அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், நிகழ்வை கொஞ்ச நேரம் இணையத்தினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். இணையத்தினூடாக வழங்கி நண்பனுக்கு எனது நன்றிகள்!

எனினும், சந்திப்பு முடியும் முன்பு அங்கு சென்று விட்டேன்! சந்திப்பு முடிவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு!

உச்சக்கட்டம் சுப்பர். முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது மனதிற்கு கவலை தான். பரவாயில்லை என்ன செய்ய.

மீண்டும் சந்திப்பு இடம்பெறும் அல்லவா! அன்று நிச்சயமாக முழுமையாக கலந்து கொள்வேன்!

Monday 17 August 2009

100 - இவ்வளவு தானா!


நான் எனது 100ஆவது பதிவையும் இட்டு சதம் அடித்துள்ளேன்.

எனது பதிவுலகை சற்று முன்நோக்கி சென்று பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன்!

இந்த பதிவுலக பிரவேசத்திற்கு ஒரு முக்கிய காரணம் வெற்றி என்று கூறினால், அது தான் சரி!

கடந்த 2008ஆம் ஆண்டு வெற்றி எவ்.எம்மிற்கு வேலைக்காக வந்த வேளையில், மேலதிக நேரம் எனக்கு கூடுதலாக இருந்தது. நான் இங்கு வேலைக்கு வந்த காலப்பகுதியில் எனக்கு யாரையும் தெரியாது.

எனது தனிமைக்கு துணையாக இருந்தது, இணையம் ஒன்று தான்! நான் இங்கு வேலைக்கு வரும் முன்பே நான் புலோக் ஒன்றை செய்து வைத்திருந்தேன்!

அப்போது தான் எனக்கு இந்த புலோக் எனது தனிமையை போக்க உதவியது.

எனது மேலதிக நேரங்களில் நான் சில பதிவுகளை இட ஆரம்பித்தேன். முன்பே ஆரம்பித்து வைத்திருந்த எனது புலோக்கை அலங்காரப்படுத்தினேன்.

எனது புலோக் மட்டுமின்றி வெற்றிக்கான செய்தி புலோக் ஒன்றையும் ஆரம்பித்தேன்! ஆனால் அது இன்று இல்லை.

இப்படி இருக்கும் காலங்களில் தான் என்னோடு புலோக் செய்யும் இன்னுமொருவரை சந்தித்தேன். அவர் தான் லோஷன் அண்ணா!



நான் வெற்றிக்கு வேலைக்குவரும் போது செய்திப்பிரிவு ஒரு இடத்திலும், நிகழ்ச்சி பிரிவு வேறொரு இடத்திலும் இருந்தது. அதனால் நான் லோஷன் அண்ணாவை சில நாட்கள் சென்றே சந்திக்க நேர்ந்தது.

ஒரு சில மாதங்களின் பின்னர் இரு பிரிவுகளும் ஒரு இடத்திலேயே இயங்க ஆரம்பித்ததும், நாங்கள் இருவரும் சேர்ந்தே புலோக் செய்வதை தொடர்ந்தோம்.

இப்படியான காலங்களில் மற்றுமொருவர் எங்களுடன் சேர்ந்தார், அவர் தான் ஹிஷாம் அண்ணா,



அவரும் எங்களுடன் சேர்ந்தார். இப்படியே எனது பதிவுகள் தொடர்ந்தது.

எனக்கு போட்டியாக புலோக் செய்யும் மற்றுமொருவர் இருக்கிறார் வெற்றியில், வேறு யார் சதீஷன்.


இவர் சில மாதங்களுக்கு முன்பே வெற்றியில் இணைந்த ஒருவர். வெற்றியில் சேர்ந்து சில நாட்களிலேயே இவரும் வந்து எங்களுடன் சேர்ந்து விட்டார்.

இன்னும் ஒருவரும் இப்போது எம்முடன் சேர்ந்து விட்டார். அவர் தான் ரஜனிகாந்தன்.


இது தான் எனது புலோக்கின் வரலாறு! எனது 100ஆவது பதிவை இட்டு, இது 101ஆவது பதிவாக எனது வரலாற்றை இடுகிறேன்!
இப்போது எனது மற்றுமொரு புலோக் வெற்றிகாரமாக இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இப்படி தனியாக பதிவுகளை இட்ட காலம் சென்று இன்று பதிவுலகத்திற்கு ஒரு புதிய உதயம்! பதிவர்கள் சந்திப்பு. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

Sunday 16 August 2009

மறைமுக செயல் அம்பலம்!



தற்போது உலகில் தொழிநுட்ப வளர்ச்சியானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியானது இளைஞர்களின் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றமை யாரும் அறிந்தவையே!

அதிலும் ஆசிய இளைஞர்கள் மத்தியில் தொழிநுட்பமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் பாவனையே அதிகளவில் காணக்கூடியதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் கையடக்க தொலைபேசி பாவனை முதன்மை பெறுகின்றதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இப்படி இருக்கும் பட்சத்தில், கடந்த 2 மாதக்காலப் பகுதியாக எமது கையடக்க தொலைபேசி கட்டணம் அதிகரித்துள்ளதை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.

சுமார் 10 நாட்களில் மாத்திரம் எனது தொலைபேசி அழைப்பு கட்டணத்தின் ஒரு மாதக்கால கட்டண தொகை வந்துள்ளதை என்னால் அறிய முடிந்தது.

இதை தொடர்ந்து நான் தொலைபேசி நிறுவனத்திற்கு சென்று எனது முன்னைய மாதங்களின் கட்டணங்களின் விபரங்களை திரட்டியதுடன், எனது வெளிச்செல்லும் அழைப்பு விபரங்களையும் பெற்றுக் கொண்டேன்.



அதை எடுத்து பரிசிலித்து பார்க்கும் போது கட்டணம் அதிகமாக குறித்த தொலைபேசி நிறுவனம் அறவிட்டுள்ளதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அந்த தகவல்களை எடுத்துக் கொண்டு எனது நிறுவனத்தில் கடமையாற்றும், முன்பு குறித்த கையடக்க தொலைபேசி நிறுவனத்தில் கடமையாற்றிய ஒருவரிடம் விசாரித்தேன்!

அவர் அவருடைய நண்பரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இது தொடர்பான தகவல்களை கேட்டார்.

அப்போது தான் தெரிய வந்தது, கடந்த இரு மாத காலங்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது மேலதிகமாக இரு வரி முறைகளை கட்டணத்துடன் உள்ளடக்கியுள்ளமை.

இந்த வரியினை இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் உள்ளடக்குகின்றமை எனக்கு அன்று தான் தெரியும்.

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உடனடி அறிவித்தலை அடுத்தே இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது கட்டணத்தை அதிகரித்தைமைக்காக தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களின் போது வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது இவ்வாறு கட்டண அதிகரிப்பினை மேற்கொண்டமை அநீயாயமான செயல் அல்லவா!

இதற்கான முடிவு விரைவில் கிடைக்கும். தொலைபேசி பாவனையின் போது உங்களாலேயே உணர முடியும் இந்த கட்டண அதிகரிப்பை!

இது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்ற போதிலும் என்னால் அதை இந்த பதிவில் கூற முடியாவில்லை.

எனது இந்த பதிவின் நோக்கம், இந்த தகவலை உங்களுக்கு அறிவிப்பதே!

இது எனது 100ஆவது பதிவு. நிச்சயம் வெற்றி தான்!

இது சுதந்திர தினமா?


சுதந்திர தினமென்றால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சந்தோஷமாக கொண்டாடும் ஒரு தினமாகும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை முழுமையாக கைப்பற்றியதை கொண்டாடும் போது எப்படி சந்தோஷம் இருக்க வேண்டும்.

சுதந்திர தின நிகழ்வென்கிற போது நாட்டின் முக்கிய பிரமுகர்கள் நாட்டின் முக்கிய இடத்தில் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி, இராணுவ அணி வகுப்பு, கடற்படையினரின் அணி வகுப்பு, விமானப்படையினரின் சாதசங்கள் உட்பட மேலும் பல அம்சங்கள் இடம்பெற வேண்டும் அல்லா!.

அது தானே சுதந்திர தினத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை!

ஆனால் தற்போது சுதந்திர தினம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள்.

இப்போது எப்படி தெரியுமா சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். ஒரு கட்டடத்திற்குள் மாத்திரம்.

நாட்டு மக்களுக்கு தெரியாது நாட்டின் எந்த பகுதியில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள் என.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

இதற்கான காரணம் தீவிரவாத அச்சுறுத்தல். ஏன்? இப்படி,

எந்த நாட்டை கூறுகிறேன் தெரியுமா? வேறு எந்த நாட்டை கடந்த 14ஆம் திகதி தனது 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தானை தான்!



பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அன்றைய தினம் சுதந்திர தினத்தை கட்டடத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு தெரியாது எங்கே சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றனவென.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

பாதுகாப்புக்கள் இருக்க வேண்டும், காரணம் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் அல்லவா!

இப்படியான சுதந்திர தினத்தை பாகிஸ்தான் மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் கொண்டாடி வருகின்றன.



ஏன் இந்தியா தனது 63ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் இடத்திற்கு மேல் சுமார் 7 மணி நேரம் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுவும் சுதந்திர தினமா?

நான் இதை நாட்டின் குறையாக சொல்லவில்லை. இதுவரை எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனதான் கூறுகிறேன்!

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் நெருப்பின் மேல் நடப்பது போல இருக்கு.

எங்கே எப்போது என்ன நடக்கும் என தெரியாது பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

உலகில் இன்று தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில தீவிரவாத அமைப்புக்கள் காரணமே இன்றி செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முதன்மையில் தலிபான்கள் உள்ளனர்.

அவர்களை முற்றாக அழிக்கும் பட்சத்தில் உலகில் தீவிரவாதம் என்ற சொல்லை ஓரளவாவது மறக்க முடியும்.

இது நாட்டிற்கான சுதந்திரமல்ல, உலகிற்கான சுதந்திரம். ஒழிக்க ஒன்றுபடுவோம்!