Saturday 13 August 2011

இரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....

மர்மம் தலை நிமிர்ந்து வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் அச்சத்தின் மத்தியிலேயே மக்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் இருந்த சூழலை தற்போதைய நாட்களில் நான் காண்கின்றேன்.

மீண்டும் இப்படியான ஒரு சூழல் உருவெடுக்காது என பல தரப்பினரும் நம்பி தமது முன்னேற்ற பாதையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் காலத்தில், முதுகின் பின்னால் இருந்து தாக்குவது போல மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்து செல்கின்றது.



மர்ம மனிதர்களின் தாக்குதலில் இதுவரை எவரும் உயிரிழக்காத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் தாக்குதல்களிலேயே அப்பாவி நபர்கள் உயிரிழக்கின்றனர்.

எனது முன்னைய பதில் நான் கூறியிருந்ததை போல காஹவத்தை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை மையப்படுத்தி சிலர் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் என்னவாக தான் இருக்கும்?



இந்த மர்ம மனிதர்களின் பின்னணி குறித்து அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச தரப்பினரை நோக்கி தனது விரலை நீட்டியிருந்தனர்.

பொலிஸாரின் அசமாயப்போக்கே மர்ம மனிதர்களின் நடமாட்டத்தின் பின்னணி என இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பொத்துவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



எது எவ்வாறு இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகள் இடம்பெற்றுவந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு இரு ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் இப்படியான ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 3 தசாப்தங்கள் இடம்பெற்றுவந்த யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே, மீண்டும் இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தினை எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால் தளர்த்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில், இவ்வாறான அச்சத்துடன் கூடிய அசாதாரண சூழ்நிலை தொடர்வதனால் அவசரகாலச் சட்டத்தினை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அவசரக்காலச் சட்டம் அமுலில் இருக்குமானால் ஒருமித்த மனதுடன் எவ்வாறு வெளியில் செல்வது.......



எத்தருணத்திலும் யாரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு முழு அதிகாரம் உள்ளதனால், அச்சம் எமக்கு தான்......

அவசரக்காலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமா? என்ற கேள்வி ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளமையை யாராலும் மறுக்க முடியாது........ ஆனால் மறைக்க முடிகின்றது அல்லவா!


பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் படம்....




நன்றி அததெரண

Wednesday 10 August 2011

மர்ம மனிதனின் நோக்கம்..... மர்மம்

திரைப்படத்தில் பார்த்த அந்நியனா இவன்? அல்லது பெண்களை தொடரும் ஆவியா இவன்?

பதில் தெரியாது இன்று பல கேள்விகளுடன் உலாவிவரும் பொதுமக்கள் ஒருபுறம் இருக்க, நடப்பது என்னவென அறியாத பாதுகாப்பு பிரிவினர் மறுபுறத்தில் அச்சத்துடன் பாதுகாப்பில் இருக்கின்ற நிலையில் ஊடகவியலாளர்களாகிய எமது நிலையோ...... பரிதாபம்.......



நடப்பது தொடர்பில் பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் அலுவலகத்திற்கு மாத்திரம் அல்லாது, எமது கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன.

ஊடகவியலாளர்களுக்கும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில் நாங்கள் மக்களின் கருத்துக்களையும், பாதுகாப்பு பிரிவினரின் கருத்துக்களையும் மாத்திரமே வெளியிட்டு வருகின்றோம்.

கிறீஸ் மனிதன் என அழைக்கப்படும் மர்ம மனிதன் யார்......?

இதற்கான பதில் என்னிடம் உள்ளது.....

இரத்தினபுரி காஹவத்தை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பெண்களின் கொலைகளை அடுத்தே இந்த மர்ம மனிதன் உருவெடுத்தான்.

மனநிலையால் பாதிக்கப்பட்டவரினாலேயே இவ்வாறான கொலைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்த போதிலும், அதனை நான் நம்பவில்லை.



இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என்பதனை அறிந்த நான், தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் தெரியாதவாறு இது தொடர்பாக ஆராய்ந்தேன்.

ஆம், நாட்டில் உலாவரும் மர்ம மனிதன் உண்மை என்பதனை என்னால் அறிய முடிந்தது.

காஹவத்தை சம்பவத்தில் காணப்பட்ட அச்ச நிலையை பயன்படுத்திய சிலர் குழுக்களாக திரண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படியான நிலையில் ஏன் பொருட்களை கொள்ளையடிக்காது பெண்களையே துன்புறுத்தி வருகின்றனர் என்ற கேள்வி உங்கள் மனதில் தற்போது உருவெடுத்திருக்கும்.

ஒருபுறம் பெண்களை பாதுகாப்பதற்கான ஆண்கள் வீதியில் இறங்கி பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ள நிலையில், திருடர்களின் கைவண்ணம் சரியாக இடம்பெற்றுகின்றன.

இந்த சம்பவங்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் சற்று உன்னிப்பான அவதானித்து பார்த்தால் நான் கூறுவதின் உண்மை தன்மை புரியும் என நினைக்கின்றேன்.



இது மர்ம மனிதனின் காலம்...... மர்ம மனிதனை தவிர எமது சகோதரர்கள் அப்பாவி ஆண்களின் மீதே தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அப்பாவி ஆண்கள் யார் முகத்தில் காலையில் விழித்தார்களோ தெரியவில்லை. தாக்குதல் சற்று பலமாகவே உள்ளது.

மர்ம மனிதனின் நடமாட்டம் உண்மை? அவர்களின் நோக்கம் பெண்கள் அல்ல.... பெண்களை மையப்படுத்திய கொள்ளை...

தயவு செய்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறி ஆண்கள் வீதியில் இறங்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். வீட்டிற்குள் இருந்தால் அதுவே பெண்களினதும், சொத்துக்களினதும் பாதுகாப்பாக அமையும் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்..

மர்ம மனிதனின் நோக்கம் சரியாக நிறைவேறுகின்ற போதிலும், காவலர்களின் நோக்கமோ அப்பாவி ஆண்களின் மீதே..............



தொடருமா மர்மம்........ நிச்சயம்.......

Tuesday 19 July 2011

ஆலயத்தின் புனிதம் இழிவுபடுமா?

இந்துக்களின் முக்கிய திருத்தலங்களை கொண்டு அமைந்த இடமாக கருதப்படும் நாடு இந்தியா.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி ஆலயத்தில் அண்மையில் பல லட்சம் கோடி ரூபா மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் என விலைமதிக்க முடியாத ஆபரணங்கள் அரசாங்கத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன.



இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட ஆபரணங்களை அடுத்து இந்தியாவின் ஏனைய ஆலயங்களும் தங்க ஆபரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சன் மற்றும் விஜய் ஆகிய தொலைக்காட்சிகள் நேற்றைய தினம் ஒளிப்பரப்பிய நிஜம் மற்றும் நடந்தது என்ன ஆகிய நிகழ்ச்சிகளில் ஏனையஆலயங்களிலும் ஆபரணங்கள் உள்ளதாக செய்திகளை வெளியிட்டன.

இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி எந்தளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. நான் அங்கு சென்று பார்க்கவும் இல்லை. ஒரு யுகத்திலேயே நான் இதனை எழுதுகின்றேன்.

பத்மநாபசாமி ஆலயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வைத்து இந்து மதத்தின் தொண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்து மதத்தின் தொண்மையை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு தற்போது புரிந்திருக்கும் இந்துமதத்தை பற்றி.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள பல ஆலயங்கள் தொடர்பாக தற்போது பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், சில ஆலயங்களில் சுரங்க பாதைகள் மற்றும் வைப்பகங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான கருத்துக்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துவரும் இந்திய அரசு, ஒவ்வொரு தனிநபர்களினாலும் எழுப்பப்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக அனைத்து ஆலயங்களின் சிலைகளை உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது முற்று முழுதாக தவறான விடயம். முழுமையாக ஆராய்ந்த பின்னரே ஆலயங்களை சோதனையிட வேண்டும் என்பதே எனது கருத்து.

ஆலயங்களின் கண்டெடுக்கப்படும் ஆபரணங்களை வைத்து பல நன்மைகளை செய்யலாம். ஒரு ஆலயத்தில் இவ்வாறான ஆபரணங்கள் கிடைத்தது என்றால், எல்லா ஆலயத்திலும் ஆபரணங்கள் இருக்கும் என்பது தவறு.

ஆலயங்களின் புனிதத்தை இழிவுப்படுத்த வேண்டாம்.

Thursday 21 April 2011

ஈழத் தமிழ் யுவதியின் சோகக்குரல்

Friday 8 April 2011

இலங்கை கிரிக்கெட் சிதைந்தமைக்கான காரணம் யார்?

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்து, இலங்கை - இந்திய ரசிகர்களுக்கு இடையிலான சண்டைகள் நிறைவடைய முன்னதாகவே இலங்கை கிரிக்கெட் பல துண்டுகளாக உடைந்து நொருங்கி விட்டது.

இதற்கான காரணத்தை பலர் பல்வேறு கோணங்களில் பார்த்தாலும், அதற்கான காரணம் அரசியலின் ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது என்றால் அது தப்பில்லை என நான் நினைக்கின்றேன்.



இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின.

இந்த போட்டியை சில ஊடகங்கள் இராமர் - இராவணன் யுத்தம் எனவும் வர்ணித்திருந்தனர்.

இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்புள்ள போட்டியை ஆசிய நாடுகள் மட்டுமன்றி உலகமே எதிர்பார்த்திருந்தது.

இந்நிலையில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியையும் இப்படியே தான் எதிர்பார்த்தார்கள்.

அது ஒரு அரசியல் நோக்கமான விளையாட்டாக இருந்த நிலையில், இந்தியாவினால் பாகிஸ்தானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



எனினும், இலங்கை - இந்திய போட்டிக்கு இந்தியாவினால் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பமாகியது. இந்த போட்டியை காண இந்திய அரசியல்வாதிகள் மாத்திரமின்றி, உலகமே ஏற்றுக் கொண்ட பல முன்னணி நடிகர்களும் வருகைத் தந்திருந்தனர்.

போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டி ஆரம்பமாகிய போதே இலங்கை அணி பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் இறுதியில் ஒரு நிலையை இடத்தை பிடித்தது.

எனினும், இந்தியாவை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.



எவ்வாறாயினும், போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒரு அரசியல்வாதியை கூட போட்டிக்கான கிண்ணங்களை வழங்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

அவ்வாறு இருக்க கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்து அடுத்த நாளே காலை இலங்கை அணி தாய் நாட்டை வந்தடைந்தது.

இதன்பின்னர் நடந்தது என்னவென சிலர் தெரிந்திருந்த போதிலும் அதற்கான பதிலை இலங்கை கிரிக்கெட் தெரிவு குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா மறைமுகமாக தாம் விளகுவதற்கான காரணம் யார் என தெரிவித்திருந்தார்.



இப்போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ஒரு "?" அமைந்து விட்டது.

என்னால் வெளியிட முடிந்த கருத்துக்கள் இவ்வளவு தான்..... மேலதிக தகவல்களை சரியாக தேடிக்கொள்ளுங்கள்.......

Monday 21 March 2011

2012யை வரவேற்றுக் கொண்டிருக்கும் நாடுகள்!

2012யை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நாட்களை அச்சத்துடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

2012 டிசம்பர் 21ஆம் திகதி இந்த உலகில் என்ன நிகழப் போகின்றது என்ற அச்சமே தற்போது மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன.



இந்நிலையில், உலக அழிவானது 2012 என்கின்ற போதிலும், தற்போதே அதன் தாக்கங்கள் ஆரம்பமாகி விட்டதை நாம் உணர்கின்றோம்.

இதன்படி, கடந்த சில வருடங்களாக உலகில் அழிவுகளுடனான மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

2000ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே உலகம் தனது அழிவை சந்திக்க ஆரம்பித்திருந்ததுடன், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.



அத்துடன், அக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய அழிவான சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாடுகள் சுமார் 248 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருந்தது.

இதனால் உலகம் மக்களை மாத்திரமன்றி, உலகின் சொத்துக்களையும் முற்றாகவே இழந்திருந்தது.

இதையடுத்து, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களை காவுக் கொள்ளப்பட்டிருந்தன.



அத்துடன், ஹெய்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் ஏற்பட்ட விளைவுகளினால் அங்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டிருந்தன.



அதனால் ஒவ்வொரு நாளும் பல மனித உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்த உண்மை.

இதனால், அந்நாடு பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக இன்று வரை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், உலகம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்ற இத்தருணமானது, 2012 என்ற அதிர்த்தி தரும் ஆண்டின் அண்மித்த பகுதியில் உள்ளது.

2012 என்றாலே உலக அழிவு என்ற பொருள் அனைவரது மனதையும் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றது.




இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஜப்பானை தாக்கியது 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் கூடிய சுனாமி.... இதனால் காவு கொள்ளப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை சரியாக இதுவரை கணிப்பிடப்படவில்லை.

இவ்வாறு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை விடவும் அதன் பின்னர் ஜப்பான் சந்திக்கவுள்ள பொருளாதார நெருக்கடியுடனான சுகாதார பிரச்சினைகள் தமது நாட்டை அழிவிற்கே கொண்டுச் செல்லும் என்ற எண்ணக்கரு எம்மத்தியில் பரவத் தொடங்கி விட்டது.



இதனுடன், 2012 டிசம்பர் வரை உலகம் பல பிரச்சினைகளை சந்திக்கும் என பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

உலகம் தனது அழிவை இயற்கையிடமிருந்து மாத்திரமன்றி, மனிதனிடமிருந்தும் எதிர்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த அழிவுகள் மாத்திரமன்றி கடந்த ஆண்டு பல விமான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன.

இந்த விமான விபத்துக்கள் இடம்பெற்றமைக்கான காரணம் கூட இதுவரை சரியாக அறியப்படவில்லை.

அத்துடன், உலகின் பல நாடுகள் எதிர்கொண்டுள்ள யுத்தம் தற்போது உக்கிர நிலையை அடைந்துள்ளது. இதுவும் கூட உலக அழிவின் ஒரு பாகமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

லிபியா, பஹ்ரேன், பாகிஸ்தான், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளில் யுத்தம் உக்கிர நிலையை அடைந்துள்ளது.




எனினும், இவை அனைத்தும் உலக அழிவாக இருக்க முடியாது.... உலகம் புதுப்பிக்கப்படும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது.

சந்திக்கும் ஒவ்வொன்றும் ஒரு அழிவையே நினைவு கூறுகின்றது. எதிர்பார்ப்போம்.... நடப்பது என்னவென.

Tuesday 15 March 2011

அருணின் கடந்த சில மாதங்கள்........



கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பதிவு உலகத்தின் பக்கம் நிம்மதியாக தலை சாய்க்க முடியவில்லை.

தற்போது எனக்கு இருந்த பல பிரச்சினைகளின் முக்கியமான பிரச்சினை தீர்ந்து விட்டது. அதனால் தற்போது ஒரு சிறிய ஆறுதலுடன் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.

கடந்த டிசம்பர் மாதமளவில் வெற்றி வானொலியிலிருந்து விலகி, இந்தியா சென்றிருந்ததுடன், ஏனைய நாட்களை வீட்டிலேயே கழித்தேன்.

சுமார் 3 மாதங்களின் பின்னர் தெரண தமிழ் வானொலியின் செய்தி ஆசிரியராக பணி புரிய நான் இந்த நிறுவனத்தில் இணைந்துக் கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள தமிழ் பிரபல இயக்குநர் ஒருவர் இளங்கோவினால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் நகைச்சுவை தொடர் நாடகமொன்றிலும் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நான் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.