வியாழன், 26 நவம்பர், 2009

மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!

தீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.

இந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்கா இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.

உலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.

இப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.அன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே! ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்குதலை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.

தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.உலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.

இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

இதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா!

0 கருத்துகள்: