ஞாயிறு, 18 ஜனவரி, 2009

சந்திராயன் 01இன் 100ஆவது நாள் வெற்றியளித்துள்ளது


இந்தியாவினால் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் 01 என்ற விண்கலம் நிலாவுக்கு 100 கிலோமீற்றர் தொலைவில் சுற்றி கொண்டுள்ளதுடன், அதன் 100ஆவது நாளையும் நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த 100 நாட்களில் சந்திராயன் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை பூமிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை விண்ணிற்கு ஏவப்பட்ட எந்த நாட்டின் விண்கலமும் இது போன்று இவ்வளவு படங்களை எடுத்து அனுப்பியதில்லை என தெரிவித்த இஸ்ரோ, இது விண்வெளி ஆய்வில் புதிய சாதனையாக கருதுவதாகவும் கூறியுள்ளது.

நிலாவை அனைத்து கோணங்களிலும் சந்திராயன் படம் பிடித்து விட்டது சராசரியாக ஒரு நாளைக்கு 535 தடவை சந்திராயன் நிலாவை படம் பிடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படங்கள் அனைத்தும் பெங்களுர் அருகே பையலு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த படங்கள் அனைத்தும் நிலாவின் மேற்பரப்பை மிக மிக தெளிவாக காட்டுகின்றன. இதன் மூலம் நிலாவில் உள்ள வளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.

சந்திராயன் அனுப்பிய படங்களை தங்களுக்கும் கொடுத்து உதவும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த இஸ்ரோ, சந்திராயன் 2 என்ற விண்கலத்தை 2012ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

1 கருத்துகள்:

Sinthu சொன்னது…

பதிவுக்கு நன்றி அண்ணா...
Sinthu
Banlgadesh