Saturday 13 August 2011

இரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....

மர்மம் தலை நிமிர்ந்து வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் அச்சத்தின் மத்தியிலேயே மக்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் இருந்த சூழலை தற்போதைய நாட்களில் நான் காண்கின்றேன்.

மீண்டும் இப்படியான ஒரு சூழல் உருவெடுக்காது என பல தரப்பினரும் நம்பி தமது முன்னேற்ற பாதையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் காலத்தில், முதுகின் பின்னால் இருந்து தாக்குவது போல மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்து செல்கின்றது.



மர்ம மனிதர்களின் தாக்குதலில் இதுவரை எவரும் உயிரிழக்காத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் தாக்குதல்களிலேயே அப்பாவி நபர்கள் உயிரிழக்கின்றனர்.

எனது முன்னைய பதில் நான் கூறியிருந்ததை போல காஹவத்தை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை மையப்படுத்தி சிலர் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் என்னவாக தான் இருக்கும்?



இந்த மர்ம மனிதர்களின் பின்னணி குறித்து அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச தரப்பினரை நோக்கி தனது விரலை நீட்டியிருந்தனர்.

பொலிஸாரின் அசமாயப்போக்கே மர்ம மனிதர்களின் நடமாட்டத்தின் பின்னணி என இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பொத்துவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



எது எவ்வாறு இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகள் இடம்பெற்றுவந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு இரு ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் இப்படியான ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 3 தசாப்தங்கள் இடம்பெற்றுவந்த யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே, மீண்டும் இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தினை எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால் தளர்த்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில், இவ்வாறான அச்சத்துடன் கூடிய அசாதாரண சூழ்நிலை தொடர்வதனால் அவசரகாலச் சட்டத்தினை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அவசரக்காலச் சட்டம் அமுலில் இருக்குமானால் ஒருமித்த மனதுடன் எவ்வாறு வெளியில் செல்வது.......



எத்தருணத்திலும் யாரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு முழு அதிகாரம் உள்ளதனால், அச்சம் எமக்கு தான்......

அவசரக்காலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமா? என்ற கேள்வி ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளமையை யாராலும் மறுக்க முடியாது........ ஆனால் மறைக்க முடிகின்றது அல்லவா!


பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் படம்....




நன்றி அததெரண

0 comments: